ஒளியிலே நடங்கள்
எபேசியர் 5:
8. முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.
9. ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.
10. கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
11. கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
12. அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.
13. அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது.
14. ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.
இருளைத் தகர்த்த வெளிச்சம்
தோற்றம்:
“வெளிச்சம் உண்டாகக்கடவது”. வேதாகமத்தில் வெளிச்சம் என்பது முதலாம் நாளில் கடவுளின் கட்டளையால் படைக்கப்பட்ட முதல் படைப்பு. அதுவரை பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; (ஆதியாகமம் 1:2)
ஒளியின் தன்மை:
இங்கே ஒளி என்பது வெறும் வெளிச்சம் மட்டுமல்ல, ஒழுங்கு, வாழ்க்கை மற்றும் தெய்வீக பிரசன்னத்தைக் குறிக்கிறது.
வேதம் ஒளியை கடவுளின் பிரசன்னம், உண்மை, பரிசுத்தம் மற்றும் வாழ்க்கையாகக் குறிக்கிறது. மேலும் வெளிச்சமானது நன்மை, நீதி மற்றும் தெய்வீகத்தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. (சங்கீதம் 27:1; சங்கீதம் 37:6; சங்கீதம் 119:105; 1 யோவான் 1:5)
ஒளியின் பிள்ளைகள்; இருளின் பிள்ளைகள்:
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருடைய ஒளியில் நடப்பவர்கள் "ஒளியின் பிள்ளைகள்". மாறாக“இருளின் பிள்ளைகள்" என்பவர்கள் கர்த்தருக்குள் இல்லாதவர்கள், பாவத்திலும், தீமையிலும் வாழ்பவர்கள்.
பெரும்பாலான நேரங்களில், நாம் மார்த்தாளைப்போல நடந்து கொள்கிறோம், மரியாளோ கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து அவருடைய வார்த்தைகளைக் கேட்கும் நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள். நாமோ நம்மை சுற்றியுள்ள வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம், அல்லாமலும், மரியாள் சமையலில் உதவவில்லை என்று புகார் செய்த மார்த்தாளைப்போல வேலையின் பளுவால் விரக்தியடைகிறோம். அவ்வாறு செய்யும்போது, அவர் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு 5,000 பேருக்கு உணவளித்த அதே கடவுள் என்பதை மார்த்தாள் மறந்தது போலவே மறந்து விடுகிறோம்.
1 தெசலோனிக்கேயர் 5:5: விசுவாசிகளை ஒளியின் பிள்ளைகள் மற்றும் பகலின் பிள்ளைகள் என்று அடையாளப்படுத்துகிறது, அவர்கள் இரவு அல்லது இருளைச் சேர்ந்தவர்கள் அல்ல.
யோவான் 3:19: ஒளியையும் இருளையும் வேறுபடுத்திக் காட்டுகிறது, மக்கள் தங்கள் செயல்கள் தீயவை என்பதால் ஒளியை விட இருளை நேசித்தார்கள் என்று கூறுகிறது.
ஏன்? ஏனெனில், 2 கொரிந்தியர் 4: 4 தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
உருமாற்றம்
இருளிலிருந்து வெளிச்சத்திற்கு:
"ஒரு காலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள், ஆனால் இப்போது நீங்கள் கர்த்தருக்குள் வெளிச்சமாக இருக்கிறீர்கள். ஒளியின் பிள்ளைகளாக நடந்து கொள்ளுங்கள்“எபேசியர் 5:8:
ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். கொலோசெயர் 1: 12-13
அகிரிப்பா ராஜாவுக்கு முன்பாக பவுல் கொடுத்த சாட்சி:
அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். அப்போஸ்தலர்26:18
ஏன் கண்கள்? கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும். லூக்கா 11:34.
சிம்சோனுக்கு மாம்ச பிரகாரமான கண் பார்வை இருந்தபோது, அவர் ஆவிக்குரிய பிரகாரமாக குருடராக இருந்தார். ஆனால் அவரது கண்பார்வையை இழந்த பிறகு, அவரது ஆன்மீக கண்கள் திறக்கப்பட்டன, அவர் கடவுளின் சித்ததுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஆவியின் கனி
ஆவி நிறைந்த வாழ்க்கையின் ஒளி
ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். எபேசியர் 5: 9. வெளிச்சத்தில் இருப்பதாகச் சொல்லியும், அதைத் தங்கள் செயல்களிலே நடைமுறைப்படுத்தத் தவறினால் இருளிலே நடக்கிறவர்களாயிருப்போம்.
யோசேப்பின் வாழ்க்கை ஆவியின் கனியின் நிலையான வெளிப்பாடாக இருந்தது:
நற்குணம்: யோசேப்பு தன்னைக் கொடுமைப்படுத்தியவர்களுக்கும் நல்லது செய்தார். அவரது சகோதரர்களால் அடிமையாக விற்கப்பட்டு பொய்யான குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட பிறகும், அவர் தன் சகோதரர்களுக்கு முழு மனதுடன் உதவி செய்தார், இறுதியில் பஞ்ச காலத்தின் போது தனது முழு குடும்பத்திற்கும் உதவினார் (ஆதியாகமம் 50: 20-21).
நீதி: போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டபோது, யோசேப்பு தேவனுக்கு விரோதமாக பாவம் செய்ய மறுத்து, "நான் எப்படி இப்படிப்பட்ட பொல்லாப்பான காரியத்தைச் செய்து, தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்ய முடியும்?" என்று கேட்டார். (ஆதியாகமம் 39:9).
உண்மை: யோசேப்பு நேர்மையானவராக இருந்தார். அவர் பார்வோனின் சொப்பனங்களை நேர்மையாக விளக்கி, எகிப்தை ஞானம், வெளிப்படைத்தன்மை மற்றும் சத்தியத்துடன் வழிநடத்தினார்.
இருளின் பயனற்ற செயல்களுக்கு எதிராக நில்லுங்கள்:
எபேசியர் 5:11: கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
2 கொரிந்தியர் 6:14: ஒளிக்கும் இருளுக்கும் இடையில் ஐக்கியம் இல்லாததால், அவிசுவாசிகளுடன் நுகத்தடியில் பிணைக்கப்படுவதற்கு எதிராக எச்சரிக்கிறது. மேலும் நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? என வினவுகிறது.
கொலோசெயர் 1:13: “இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்”. இவ்வசனம், தேவன் விசுவாசிகளை இருளின் களத்திலிருந்து விடுவித்து, தம்முடைய நேச குமாரனின் ராஜ்யத்திற்கு மாற்றுவதைப் பற்றி பேசுகிறது.
வேதாகம விவரிப்பு: நேபுகாத்நேச்சார் ராஜா அறுபது முழ உயரமும் ஆறு முழ அகலமும் கொண்ட ஒரு பொற்சிலையை நிறுத்தி, எல்லா ஜனங்களும் குனிந்து அதை வணங்கும்படி கட்டளையிட்டபோது, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் தங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டனர். அதற்குப் பதிலாக, அக்கினிச் சூளையை எதிர்ப்படுவதையே அவர்கள் தீர்மானித்தார்கள். நெருப்பை ஏழு மடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி நேபுகாத்நேச்சார் கட்டளையிட்ட பிறகும்கூட அவர்கள் தங்கள் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருந்தார்கள். அந்தத் தீப்பிழம்புகள் அவ்வளவு கடுமையாக இருந்ததால் அவர்களைச் சூளைக்குள் எறிந்த போர்ச்சேவகர்கள் செத்துப்போனார்கள், என்றபோதிலும் அந்த மூன்று பேரும் எந்தக் காயமும் இன்றி கடவுளுடைய பிரசன்னத்தால் பாதுகாக்கப்பட்டார்கள். அவர்கள் இருளின் பயனற்ற செயல்களுக்கு எதிராக உறுதியாக நின்றதால், தேவன் அவர்களை ராஜாவுக்கு முன்பாக உயர்த்தினார். அக்கினிச் சூளையில் கடவுளின் பிரசன்னத்தைக் காண்பதன் மூலம், இஸ்ரவேலின் தேவன் உண்மையான மற்றும் ஜீவனுள்ள தேவன் (தானியேல் 3) என்று நேபுகாத்நேச்சார் அறிக்கையிடுவதற்கு இந்த நிகழ்வு ஒரு காரணமாக அமைந்தது.
தேவன் ஒளியாயிருக்கிறார்
கடவுளிடமிருந்து கேட்கப்பட்டு அறிவிக்கப்பட்ட நற்செய்தி
" தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. " (1 யோவான் 1:5).
கடவுளுக்கும் ஒளிக்கும் உள்ள உறவு:
ஒளி தூய்மை, உண்மை மற்றும் பரிசுத்தத்தை குறிக்கிறது. தேவனிடத்தில் நிழல் இல்லை, பாவம் இல்லை, வஞ்சனை இல்லை. அவர் முற்றிலும் நீதியுள்ளவர், அவருடைய ஒளி எல்லா இருளையும் வெளிப்படுத்துகிறது.
விசுவாசிகளாகிய நாம் ஒளியில் நடக்க அழைக்கப்படுகிறோம். நாம் அவருடன் ஐக்கியம் கொண்டிருக்கிறோம் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:6-7).
கிறிஸ்துவின் ஒளி
எபேசியர் 5:12-14 இவ்வுலகில் கிறிஸ்துவின் ஒளியையும் அன்பையும் பிரதிபலிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நம் வாழ்க்கை கடவுளின் ஒளியின் பரிசுத்தத்தாலும் சத்தியத்தாலும் பிரகாசிப்பித்து, நம்மைச் சுற்றியுள்ள இருளை ஒளிரச் செய்ய வேண்டும்.
இப்படி இருளை ஒளியினால் வெளியரங்கமாக்கும்போது இருளும் வெளிச்சமாகிறது.
நாம் ஒளியில் நடக்கும்போது, நாம் தனியாக இல்லை. நாம் ஒருவருக்கொருவர் ஐக்கியப்படுகிறோம், இயேசுவின் பலியின் மூலம் ஆழமான கிருபையின் பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறோம்.
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். யோவான் 12:46
வேதாகம விவரிப்பு: பேதுருவின் வாழ்க்கையில், மறுரூபமலையின் தரிசனத்தின் போது (மத்தேயு 17:1-2) போன்ற பல தருணங்களில் அவர் கிறிஸ்துவின் ஒளியை கண்டார். ஆனாலும், எந்த மனிதனையும் போலவே, பேதுருவும் சில சமயங்களில் இருளில் தடுமாறினார், குறிப்பாக அவர் இயேசுவை மூன்று முறை மறுதலித்தார் (லூக்கா 22:54-62). இருப்பினும், இயேசு அவரை நேரில் சந்தித்து, அவருடைய ஆடுகளை மேய்க்கும்படி மூன்று முறை கேட்டபோது, பேதுரு கிறிஸ்துவின் ஒளிக்கு நித்திய மற்றும் பின்மாற்றம் அடையாத வகையில் மீட்டெடுக்கப்பட்டார் (யோவான் 21:15-17). அதேபோல், கிறிஸ்துவுடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பை நாம் அனுபவிக்கும்போது, நாமும் அவரது நீடித்த மற்றும் பின்மாற்றம் அடையாத நித்திய ஒளியைப் பெறுகிறோம்.
வெளிச்சத்தில் நடப்பது எப்படி?
1. கடவுளின் சத்தியத்தைத் தழுவுங்கள்.
தினந்தோறும் வேதவசனத்தை வாசியுங்கள் (கொலோசெயர் 3:16).
உங்கள் வாழ்க்கையில் சத்தியத்தை நாடிச் செயல்படுத்துங்கள்.
2. பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்புதல்
1 யோவான் 1: 8. நாம் பாவம் செய்யாதவர்கள் என்று கூறினால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம், சத்தியம் நம்மில் இல்லை. 9 நாம் நம் பாவங்களை அறிக்கையிட்டால், அவர் உண்மையுள்ளவரும் நீதியுள்ளவருமாயிருக்கிறார், நம் பாவங்களை மன்னித்து, எல்லா அநீதியிலிருந்தும் நம்மைச் சுத்திகரிப்பார்.
கடவுளுடன் வெளிப்படையாக இருங்கள்
கடவுளின் கிருபையைச் சார்ந்திருங்கள்
3. இயேசுவைப் பின்பற்றுங்கள்
ஒளியில் நடப்பதற்கான சரியான மாதிரி இயேசுவே.
யோவான் 8:12. (இயேசு) நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
அழைப்பு:
விசுவாசிகள் நற்செயல்கள், உண்மை மற்றும் அன்பின் மூலம் கிறிஸ்துவின் ஒளியைப் பிரதிபலிக்கவும், பிதாவை மகிமைப்படுத்தும்படி, ஒரு தார்மீக மற்றும் ஆவிக்குரிய சாட்சிகளாக செயல்படவும், அழைக்கப்படுகிறார்கள்.
மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத்தேயு 5:16
Comments
Post a Comment